இராஜயோகம் செய்தால் மனதை ஒரு நிலைப்படுத்தி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடமுடியும்.
இவ்வாறு பதுளை பிரமகுமாரிகள் இல்லத்தின் பிரமகுமாரி லோகா தெரிவித்தார்.
பிரமகுமாரிகள் இல்லத்தின் பதுளைக் கிளை நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி செவ்வி ஒன்றினை அளிக்கும்போதே பிரமகுமாரி லோகா மேற்கண்ட விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
அவர் தெரிவித்த மேலும் கருத்துகள் வருமாறு:
கேள்வி: முதலில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்: சமய, சாதி, மத பேதமின்றி நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் 800 இற்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களுடன் 8 1/2 லட்சத்துக்கு மேற்பட்ட இராஜயோகிகளுடன் இந்திய ராஜஸ்தான் அபுமலையில் தனது தலைமை யகத்தைக் கொண்டு இயங்குகிறது பிரமகுமாரிகள் இராஜயோக நிலையம்
இலங்கையில் சேவாலங்கா நிகழ்ச்சித் திட்டத்தினூடாக 20 இற்கும் மேற்பட்ட துணை நிலையங்களைக் கொண்டுள்ளது. இற்றைக்கு 72 ஆண்டுகளுக்கு மேலாக எமது பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினூடாக பல சேவைகளைச் செய்து வருகின்றோம்.
கே: இராஜயோகம் என்றால் என்ன?
ப: மிக மேலானதும் இலகுவானதுமான தியான முறையாகும். இப்பயிற்சியில் கண்களைத் திறந்துகொண்டு நாம் எமது மனதை ஒரு நிலைப் படுத்துகின்றோம். இதன் மூலம் இணக்க மனப்பாங்கையும், சமநிலையையும், அமைதியையும் எய்த முடியும்.
கே: இதனைச் செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் எவை?
ப : வயது வேறுபாடின்றி அனைவரும் இந்த இராஜயோகத்தைச் செய்ய முடியும். இதன் மூலம் புலன்களைக் கட்டுப்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்துவதனால் இரத்த ஓட்டவேகமும், சுவாச வேகமும் அமைதியடைகின்றன.
இதனால் எமக்கு ஏற்படும் பாரிய நோய்களாகிய குருதி அமுக்கம், சிறுநீரகப் பிரச்சினை, மாரடைப்பு போன்றவற்றை முற்றாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியரினால் திகதி குறிக்கப்பட்டபோதும் அதிலிருந்து மீண்டும், நீண்டதொரு காலத்திற்கு அவர்களால் வாழமுடியும் என்பதை உறுதியுடன் கூறமுடியும்.
இதற்கு அவர்களுடைய விடா முயற்சிதான் அவசியம். இந்த இராஜயோகப் பயிற்சியின் மூலம் வைத்தியர்களால் கைவிடப்பட்டவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், நிலையான அமைதி உணர்வு, மன ஒருமைப்பாடு, மனத்தெளிவு, நேசமான உறவுமுறைகள், ஆரோக்கியமும் உற்சாகமும், மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு, தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுதல், ஞாபகசக்தி, மனதை அலைபாயவிடாதிருத்தல் போன்ற நன்மைகளைப் பெறமுடியும்.
கே: இராஜயோகத்தை எவ்வாறு பயிலமுடியும்.
ப: ஏழு நாட்களுக்கு தினசரி ஒரு மணிநேரம் எம்மால் வழங்கப்படும் இலவசப் பாடநெறியே இராஜயோகத் தியானத்தைப் பயில்வதற்கான சிறந்ததும் இலகுவானதுமான முறையாகும்.
கே: இராஜயோகம் செய்கின்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் எவை?
ப: இவர்கள் உண்ணும் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக, தாவர உணவு சிறந்தது. தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.
கே: தியானத்திற்கும் யோகாசனத்திற்குமிடையிலான வேறுபாடு என்ன?
ப: தியானம் என்பது மனோ சக்திக்காகச் செய்யப்படுவது. ஆத்மாவில் தான் மனம், யுக்தி, சமஸ்காரங்கள் இருக்கின்றன. அதனால் இதனை அடுத்த பிறவிக்கும் நாம் கொண்டு செல்கிறோம்.
யோகாசனமென்பது உடம்பின் சக்திக்காகச் செய்யப்படுவது. அதாவது, உடம்பிலிருக்கும் தேவையற்ற சதைகளைக் குறைத்து மூட்டுக்களை வலிமைபெறச் செய்கிறது.
கே: இதனை ஓர் ஆற்றுப்படுத்தல் செயற்பாடு எனவும் கொள்ள முடியுமா?
ப: ஆம். இன்று ஒவ்வொருவரும் பல்வேறான பிரச்சினைகளுக்கும் நெருக்கீடுகளுக்கும் மிகப் பாரதூரமாக முகம் கொடுத்து வருகின்றார்கள். இதனால் இவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இது விரக்தி, பிடிப்பின்மை, சோர்வு, ஆர்வமின்மை, முயற்சியின்மை போன்ற பல்வேறான தாக்கங்களை ஏற்படுத்தும்.
எனவே, இவ்வாறானவர்களுக்கும் ஆற்றுப்படுத்துகையென்பது மிகவும் அவசியமானது. எமது நிலையத்தால் நடத்தப்படும் இராஜயோக தியானமானது ஒரு சிறந்த நிவாரணி என்பதை உறுதிபடச் சொல்லமுடியும். எனவே, இதுவும் ஓர் ஆற்றுப்படுத்துகை என்பதற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.
கே: இராஜயோகத்தைப் பற்றி வேறு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
ப: சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்பவர்களும் சந்தோஷமான, நிம்மதியான வாழ்க்கையை இதன்மூலம் வாழமுடியும். இதிலிருந்து நான் யார்? நான் யாருடைய குழந்தை? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போகப்போகின்றேன்? என்பதையும் உணரச்செய்ய முடியும், இந்தப் பயிற்சியின் மூலம் ஞாபகசக்தியை அதிகரிக்க முடியும். இதில் ஒழுக்க நெறிகள், பண்புகள், தெய்வீகக் குணங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இன்று பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தில் எம்மைக் காக்கும் சக்திதான் தெய்வீகசக்தி. இந்தத் தெய்வீகசக்தியை இப்பயிற்சியின் மூலம் நாம் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் வெளிப் புலன்களையும், உட்புலன்களாகிய மனம், புத்தி, இரண்டையும் கட்டுப்படுத்துவதன் மூலம் ஓர் பூரணத்துவத்தை அடையமுடிகிறது.
மனதளவில் இன்று பாதிக்கப்பட்டுக் கண்ணீரோடு தமது வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இதன்மூலம், “எனக்கும் என் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ முடியும்’ என்ற எண்ணத்தையும், நம்பிக்கையையும் உருவாக்க முடியும்.
இவ்வாறு விளக்கம் தந்தார் பதுளை பிரமகுமாரின் இல்லத்தின் பிரமகுமாரி லோகா.